டொலர் கணக்குகளை ரூபாவாக மாற்றும் திட்டம் இல்லை!

வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக்கணக்குகளில் உள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வெளிநாட்டு நாணயக்கணக்கைப் பேணும் சில வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கான கோரிக்கை குறித்த வங்கிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக விண்ணப்பமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருப்பதாகவும் சமூகவலைத் தளப்பக்கங்களில் பதிவுகளைச் செய்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அதனூடாக மேற்கண்டவாறான தெளிவுபடுத்தலை வழங்கியிருக்கின்றார்.

வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக்கணக்கிலுள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு நாட்டிலுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி பணிப்புரை வழங்கியிருப்பதாக சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை அஜித் நிவாட் கப்ரால் அப்பதிவில் தெரிவித்திருக்கின்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!