படிக்காமல் கைபேசியில் கேம் விளையாடிய மகனை அடித்துக்கொன்ற தந்தை!

படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகனை அவரது தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நீப் சராய் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 27). பால் வியாபாரியான இவருக்கு உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார்.

இதற்கிடையில், ஆதித்யா நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது மகன் உத்கர்ஷ் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆதித்யா தனது மகனிடம் செல்போனில் கேம் விளையாடுவதை நிறுத்தி விட்டு பாடம் படிக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், தந்தையை பேச்சை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஆதித்யா அருகில் இருந்த கட்டையால் தனது மகனை தாக்கியுள்ளார். மேலும், அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், உத்கர்ஷ் மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது, மகன் மயங்கி விழுந்ததை கண்ட உத்கர்ஷின் தாய் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு உத்கர்ஷினை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனின் கழுத்து, மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் உத்கரிஷின் தாயிடம் விசாரணை நடத்தினர். மேலும், உத்கரிஷின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தை ஆதித்யா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உத்கரிஷினை அவரது தந்தை ஆதித்யா தொடர்ந்து அடித்ததாகவும், அதில், சிறுவன் உயிரிழந்திருக்கலாம் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தினர்.

இதனையடுத்து, ஆதித்யாவிடம் தொடர்ந்து நடத்தி விசாரணையில் தனது மகனை கடுமையாக தாக்கியதையும், அவர் மயங்கி விழுந்ததையும் உறுதி செய்தார். இந்த வாக்குமூலத்தையடுத்து ஆதித்யாவை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!