‘இவை ஓமிக்ரான் தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்காது’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

மாற்றமடைந்து கொண்டே போகும் கொரோனா வைரஸை நாம் கையாள தொடங்கி ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் தற்போதும் கூட உங்கள் வீட்டின் அருகிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில், சாதாரண துணியால் ஆன மாஸ்க்குகளை வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால்? புரிந்துகொள்ளுங்கள்! அவைகளால் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியாது.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பின் ஒரு பகுதியாக முகக்கவசங்களை பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்துகிறது.

அதே உலக சுகாதார அமைப்பானது, கடந்த டிசம்பர் 2020-இல் வெளியிட்ட அதன் வழிகாட்டுதல்களில், ஒரு முகக்கவசம், அது சரியாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, போதுமான பாதுகாப்பையோ அல்லது மூலக் கட்டுப்பாட்டையோ வழங்க போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால், முகக்கவசத்தை சரியான சுத்திகரிப்புப் பழக்கங்களுடன் இணைத்துக்கொள்வது வைரஸைத் தடுக்க உதவும்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பல்வேறு வகையான முகக்கவசங்கள் பயன்பாட்டில் உள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான யு.எஸ் மையங்கள் (CDC) பின்வரும் வகைகளில் முகக்கவசங்களை வகைப்படுத்தியுள்ளன: பருத்தி அல்லது செயற்கை துணியால் செய்யப்பட்ட துணி முகக்கவசங்கள்; 3 அடுக்கு பாதுகாப்புகளை கொண்ட சர்ஜிக்கல் அல்லது டிஸ்பென்ஸபிள் மாஸ்க்குகள்; நான்கு அல்லது ஐந்து அடுக்குகளாலான வளைந்த வடிவமைப்பை கொண்ட ரெஸ்பிரேட்டர்ஸ் அல்லது கேஎன்95 போன்ற நான்-மெடிக்கல் மாஸ்க்குகள்.

“துணியால் ஆன முகக்கவசத்தை ஒருவர் அணிந்திருக்கும் பட்சத்தில் அவர் பேசும் போதோ, ​​இருமல் அல்லது தும்மலின் போதோ அவர் வெளியேற்றும் சுவாசத் துளிகளை வெளிக்கிடாமல் பார்த்துக்கொள்கிறது. அதுமட்டுமின்றி, துணி மாஸ்குகள் ஆனது அணிந்திருப்பவர்களை, மற்றவர்கள் வெளியிடும் நீர்த்துளிகளை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்க ஒரு தடையாகவும் செயல்படுகிறது.

மிகவும் பயனுள்ள துணி மாஸ்க்குகள் பல அடுக்குகளால் செய்யப்படுகின்றன. அதாவது பருத்தி நூலை கொண்டு மிகவும் இறுக்கமாக நெய்யப்பட்ட துணி மாஸ்குகள். இதுபோன்ற பல அடுக்குகள் கொண்ட முகக்கவசமானது, உங்கள் வழியாக அதிக நீர்த்துளிகள் வெளியேறுவதையும், அதேசமயம் மற்றவர்களிடம் இருந்து உள்நுழைவதையும் தடுக்கும்” என்று அமெரிக்காவின் மேயோ கிளினிக்கின் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க,நோஸ் வயர்களை (Nose Wires) கொண்ட துணி மாஸ்குகள் மற்றும் பிரகாசமான ஒளி நிலைமைகளின் போதும் கூட ஒளியைத் தடுக்கும் அளவிலான துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் மட்டுமே கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று சிடிசி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) கூறுகின்றன.

இதெல்லாம் வைத்து பார்க்கும் போது, உங்கள் வீட்டின் அருகிலுள்ள கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்கள் ஆனது சர்வதேச தரத்திற்கு இணங்குகிறதா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் அணியும் முகக்கவசமானது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போதுமான செயல்திறனை வழங்காத பட்சத்தில் அது உங்களை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கடுமையான ஆபத்தை உண்டாக்கும் என்பதால், துணி மாஸ்குகளை வாங்கினாலும் கூட அது நல்ல தரமான முகக்கவசமா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிபடுத்திக்கொள்ளவும்,

இல்லையெனில், எது தரமானது? எது தரமற்றது? என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் துணியால் ஆன முகக்கவசங்களை தவிர்த்துவிட்டு 3 அல்லது 5 வரையிலான அடுக்குகளை கொண்ட மாஸ்குகளை பயன்படுத்த தொடங்குவது நல்லது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!