ரணிலின் கோரிக்கையை ஏற்றது அரசாங்கம்! தயார் என்றும் அறிவிப்பு!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிம்மாசன உரையின் பின்னர் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி சபையில் உரையாற்றியதைத் தொடர்ந்து, ஒத்திவைப்பு விவாதத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பில் அவர், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,இது 1978 அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னதாக அரசியலமைப்பின் 70 வது சரத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் டிசம்பர் 12, 2021 அன்று நள்ளிரவில் இருந்து நாடாமன்றத்தை ஒத்திவைத்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இதன்படி, அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த ஒத்திவைப்பு விவாதத்தை ஜனவரி 19, 20 மற்றும் தேவைப்பட்டால் 21 ஆம் திகதிக்கு ஒதுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!