ரணில், சஜித்துடன் ஒருபோதும் கூட்டணி இல்லை!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை. தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
    
கொழும்பு – 12 இல் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் கொள்கை அலுவலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் போது நாட்டின் உண்மை நிலைவரத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். உண்மையில் கட்சி மாநாடுகளின் போது ஆதரவாளர்கள் எம்மிடம் கேள்விகளுக்கே நாம் பதிலளிக்கின்றோம்.

நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் மாத்திரமின்றி , அதற்கு வெளியிலும் எமது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றோம். நாட்டு மக்கள் தற்போது சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளனர். எனவே அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் அவர்களைப் பாதுகாப்பதற்காகவே செயற்பட்டு வருகின்றோம். மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது இலக்காகும்.

1977 திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் எந்தவொரு அரசாங்கத்திலும் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை.

நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தாலும் , அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அது மக்களின் நன்மைக்கானதாகவே இருக்கும். ஆனால் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிக்க தயாராக இல்லை. தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும்.

அரசியல் கட்சி சாராத முற்போக்கான தேசிய அமைப்புக்களுடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!