அரசுக்குள் இருந்து விமர்சிப்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கை!

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கடுமையான தீர்மானத்தை முன்னெடுப்பார் என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது எல்லை கடந்த நிலையில் உள்ளது.

இவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் எவ்வித பாதிப்பும் அரசாங்கத்திற்கு ஏற்படாது. 2015ஆம் ஆண்டு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டு அரசியல் ரீதியில் அரங்கேற்றிய நாடகத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி விரையில் கடுமையான தீர்மானத்தை முன்னெடுப்பார்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எந்நேரமும் 2015 ஆம் ஆண்டு செயற்பட்டதை போன்று செயற்படுவார் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி அவர்கள் வெளியேறுவதற்கு முன்னர் அவர்களை வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!