கேட்டது மூன்று நாள்- கிடைத்தது 4 மணி நேரம்!

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதத்தை மூன்று நாட்கள் நடத்துவதற்கு உடன்படாத சபாநாயகருக்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நேற்று அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அக்கிராசன உரையை சபையில் ஆற்றும் சந்தர்ப்பத்தில் சபாநாயகருக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ், விதிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பி இவ்வாறானதொரு எதிர்ப்பினை எழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை ஆரம்பித்து வைத்து எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றவுள்ள அக்கிராசன உரை தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதி மற்றும் 20ஆம் திகதி பிற்பகல் வேளையில் தலா இரண்டு மணித்தியால விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு இரண்டு மணித்தியாலங்கள் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவாதத்துக்கு மூன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் கோரியபோதும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் உடன்படவில்லை.

விவசாயிகளின் உரப்பிரச்சினை உட்பட நாற்பது, ஐம்பது கேள்விகள் குவிந்து கிடக்கும் இவ்வேளையில் அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் கோரும் 3 நாள் விவாதத்துக்குப் பதிலாக இரண்டு மணி நேர விவாததத்தை ஏற்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாராளுமன்றத்தை அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு (18, 19, 20 மற்றும் 21) கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!