சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு: அதிசயம் நடக்கும் என நம்பும் அக்கா – தண்டனை ரத்தாகுமா?

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பிலான மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்திய வம்சாவளி தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் (33) என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009ல் சிங்கப்பூருக்கு ‘ஹெராயின்’ என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.

கிரிமினல் குற்றவாளிகள் போல நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை கண்டித்து பிரிட்டனின் ‘சேஞ்ச் டாட் காம்’ வலைதளத்தில் ஏராளமானோர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாகேந்திரன் குறித்து அவரின் 35 வயதான அக்கா சர்மிளா முன்னர் கூறுகையில், நான் அற்புதங்களை நம்புகிறேன்… கடவுள் அருளால் ஒரு அதிசயம் நடக்கும். என் சகோதரர் அன்பானவர், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர். கூச்ச சுபாவமுள்ளவரான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தலுக்கு வற்புறுத்தப்பட்டார்.

சிங்கப்பூர் அரசு அவரது உயிரை காப்பாற்றும் என நம்புகிறோம். அவர் அறிவுசார் இயலாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே நாகேந்திரன் மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் திகதி நிறைவேற்ற வேண்டும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

ஆனால், நாகேந்திரன் கொரோனாவால் பாதிப்பு அடைந்ததால் அவரது மரண தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, மரண தண்டனையை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் ஜனவரி 24-ம் திகதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ், பெலிண்டா ஆங் மற்றும் சாவ் ஹிக் டின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விசாரணைக்கு பிறகு நாகேந்திரனின் மரண தண்டனை ரத்தாகுமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!