மைத்திரியின் ஆச்சரியமான இறுதி அத்தியாயமா? ரணில் ராஜபக்ச தரப்பை திணறடிக்கும் மாற்று வியூகம்!

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவிற்கு சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை கோரி இருந்தால், என்ன நடந்திருக்கும்..?. இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவான புதிதில் ஒரு நாள் சிரித்தவாறு சில ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்வி.

“ என்ன நடக்கும்? நீங்கள் அங்கத்துவத்தை பெற்ற உடன் நீங்கள் அந்த கட்சியின் தலைவராகி இருப்பீர்கள்.” என அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், கட்டாயம் அவர் கட்சியின் தலைவராவார் என்ற ஷரத்தை நினைவுப்படுத்தியே அந்த ஊடகவியலாளர் இதனை கூறினார்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்ற எண்ணம் மைத்திரிக்கு இருந்ததா?. அதனை கூற முடியாது. எனினும் மைத்திரி வெற்றி பெற்ற நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மைத்திரிக்கு அங்கத்துவத்தை வழங்கி கட்சியின் தலைவர் பதவியை வழங்கி இருந்தால், இன்று மருந்துக்குக் கூட ராஜபக்சவினரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்.
அப்படியானால், தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டை ஆட்சி செய்திருக்கும். இதனை வேறு எவரையும் விட ரணில் விக்ரமசிங்க நன்றாக அறிந்தவராக இருந்தார். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியையும் மைத்திரியையும் பிரித்து வைக்கும் தேவை அவருக்கு இருந்தது.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலை அறிவித்து, மகிந்தவுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளார் என்பதை அன்றைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தல் பிரசாரக் குழுவின் கூட்டத்திலேயே அறிந்துக்கொண்டார். அந்த நேரத்தில் பிரசாரக் குழுவில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, மைத்திரியை கெட்டவார்த்தைகளால் திட்டிய போது, ரணில் அற்புதமான கதை ஒன்றை கூறினார்.

“ மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேற வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நான் மகிந்தவை சந்திக்க சென்ற போது, மைத்திரியை ஐந்து காசுக்கு நம்ப வேண்டாம், அவர் எனக்கு செய்ததை உங்களுக்கும் செய்ய மாட்டார் என்று எண்ண வேண்டாம் எனக் கூறினார்” என ரணில் குறிப்பிட்டார். மகிந்த அன்று தனக்கு வழங்கிய ஆலோசனை முற்றிலும் சரியானது என விளக்கவே ரணில் இந்த கதையை கூறினார்.

ரணில் அன்றில் இருந்து மகிந்தவின் ஆலோசனையை தலையில் வைத்துக்கொண்டே மைத்திரியை நோக்கி வந்தார். மைத்திரி தனது ஜனாதிபதி பதவிக்கு வேட்டு வைத்தது போல், ரணிலின் கட்சித் தலைவர் பதவிக்கும் வேட்டு வைப்பார் என்ற நிலைப்பாட்டை மகிந்த ரணிலுக்குள் விதைத்தார். ரணில் அதற்காகவே அஞ்சினார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதும் ரணில், மைத்திரியை வாழ்த்தினார். மைத்திரி சுதந்திரக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று அந்த கட்சியின்பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தன்னை பிரதமராக நியமிப்பார் என்ற காரணத்திற்காக ரணில் மைத்திரியை வாழ்த்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகும் இறுதி வாய்ப்பும் மைத்திரிக்கு இல்லாமல் போனது என்று மனதை தோற்றிக்கொண்டே வாழ்த்தினார்.

மைத்திரியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்குவது தொடர்பாக இரண்டு பேர் அச்சம் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மகிந்த. மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் தலைவராக மாறினால், ராஜபக்சவினரின் கதை முடிந்துவிடும் என்பதை மகிந்த அறிந்திருந்தார். மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவிக்கு வந்தால், தனது கதை முடிந்துவிடும் என ரணில் அறிந்திருந்தார்.

அதேபோல் மைத்திரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை கையில் எடுத்த பின்னரும் மகிந்தவும் ரணிலும் அச்சத்திலேயே இருந்தனர். மைத்திரி சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை கைப்பற்றினால், ராஜபக்சவினர் முடிந்து விடுவர் என மகிந்த கணக்கு போட்டிருந்தார். மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றினால், தன்னை விரட்டி விட்டு, சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பார் என ரணில் பயந்தார். இதனால், மைத்திரிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்காது, மகிந்த கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்கினார்.

ரணில், மைத்திரிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை இல்லாமல் செய்து, சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்காது, மகிந்தவின் கூட்டு எதிர்க்கட்சிக்கு உதவினார். மகிந்தவும் ரணிலும் இணைந்து ஆடும் விளையாட்டை மைத்திரி நன்கு அறிந்திருந்தார். மைத்திரி இந்த விளையாட்டில் மகிந்தவை ஆட்டமிழக்க செய்வதற்காக ராஜபக்சவினருக்கும், மகிந்தவுடன் எழ முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களையும் துரத்தி , துரத்தி தாக்கினார்.

மைத்திரி இந்த விளையாட்டில் வெற்றி பெற்று சுதந்திரக் கட்சியை பிடிப்பார் என்ற அச்சத்தில் ரணில், ராஜபக்சவினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினரை காப்பாற்றினார். விளையாடி விளையாடி களைப்பான பின்னர் மைத்திரி அந்த விளையாட்டை நிறுத்திக்கொண்டார். “ ஐக்கிய தேசியக் கட்சி என்பது மிகப் பெரிய கட்சி என்று நான் நினைத்தேன். முன்னர் ஜே.ஆர்.மற்றும் பிரேமதாசவின் காலத்தில் நாங்கள் கிராமங்களில் அச்சத்துடனேயே கூட்டங்களை நடத்துவோம். எங்கே இந்த மிகப் பெரிய கட்சி?. ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னர் இருந்த பாரிய பிரசார கட்டமைப்பு, சுதந்திரக் கட்சியை பூஜ்ஜியமாக மாற்றியது. எங்கே அந்த பிரசாரக் கட்டமைப்பு?.” என மைத்திரி ஒரு முறை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடம் கேட்டார்.

மகிந்த ரணிலுக்கு தனது நல்ல முகத்தை காட்டி ஆடும் விளையாட்டில் மகிந்த தன்னை மாத்திரமல்ல ரணிலையும் ஆட்டமிழக்க செய்வார் என்பதை புரிந்துக்கொண்டே மைத்திரி இந்த கேள்வியை கேட்டிருந்தார். மகிந்தவை ஆட்டமிழக்க செய்வது கடினம் என்பதை உணர்ந்துக்கொண்ட மைத்திரி, ரணிலை ஆட்டமிழக்க செய்யும் விளையாட்டை ஆரம்பித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமையின் கீழ் மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுத்து ராஜபக்சவினரை இல்லாமல் செய்யும் என்று எண்ணியே அவர் இந்த ஆட்டத்தை ஆரம்பித்தார். எனினும் மைத்திரி தன்னை தாக்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சியையே தாக்குகிறார் என ரணில் கட்சியினருக்கு காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பலமான கட்சியாக மாற்றி ராஜபக்சவினரை ஒழிப்பதற்காகவே மைத்திரி அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை சில முறை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார். மைத்திரி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியை பற்றி கூறியது சரிதான் என்பது 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை பார்த்ததும் புரிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியை பற்றி 2020 ஆம் ஆண்டு சிந்திப்பதற்கு பல காலங்களுக்கு முன்னர் மைத்திரி அந்த கட்சிக்கு ஏற்பட போகும் நிலைமையை கண்டிருந்தார். சரி அந்த நேரத்தில் கருவோ, சஜித்தோ பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?. அப்படி நடந்திருந்தால், தற்போதும் ஆட்சியில் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமாக இருந்திருக்கும்.

மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகி, கரு அல்லது சஜித் இருவரில் ஒருவர் பிரதமராக பதவி வகித்திருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், ராஜபக்சவினர் எதிர்க்கட்சியில் அல்லது வீட்டில் இருந்திருப்பார்கள். மைத்திரியின் இந்த தந்திரத்தை மகிந்தவே நன்றாக புரிந்துகொண்டவராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு மைத்திரி, ரணிலை நீக்கி விட்டு, மகிந்தவை பிரதமராக நியமித்த மறுநாள் கோட்டாபய ரணிலை சென்று சந்தித்தார். அவர் ரணிலை சந்தித்து என்ன பேசினார் என்பது யாருக்கும் தெரியாது. எனினும் கருவுக்கோ, சஜித்திற்கோ பிரதமர் பதவியை வழங்கி விட்டு, தான் விலக மாட்டேன் என்பதை ரணில், மகிந்தவுக்கு அறிவித்திருக்கலாம்.

2018 ஆம் ஆண்டு மகிந்த பிரதமர் பதவியை ஏற்று அசிங்கப்பட்டாலும் மகிந்தவுக்கு பிரதமர் பதவியை விட பெறுமதியான ஒன்று கிடைத்தது. அதுதான் மைத்திரி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையிலான உறவை முற்றாக முறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தலைவர் மைத்திரியுடன் இணையும் வாய்ப்பை இல்லாமல் செய்தது. மகிந்த அல்ல ஐக்கிய தேசியக் கட்சியே தனது பொது எதிரி என்பதை மைத்திரி உணர்ந்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணியும் பார்க்க முடியாது என்பதை மைத்திரி உணர்ந்தார். சஜித்தை அல்லது டி.எஸ். சேனாநாயக்கவை புதைகுழியில் இருந்து எழுப்பிக்கொண்டு வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற செய்யமுடியாது என்பதை மைத்திரி உணர்ந்தார். எனினும் ராஜபக்சவினர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற 50 சத வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள சுதந்திரக் கட்சியின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் என்பதை மைத்திரி அறிந்திருந்தார்.

அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் தனக்குரிய ஜனாதிபதியின் அதிகாரங்களை செயலிழக்க செய்து வைக்க வேண்டும் என்ற ராஜபக்சவினரின் தேவையையும் அறிந்திருந்தார். ராஜபக்சவினர் இவை இரண்டை பிரித்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர். இவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பின்னணியை உருவாக்கிக்கொண்டு, கோட்டாபய ஜனாதிபதியாக பதவிக்கு வந்து நீண்ட நாட்கள் செல்லும் முன்னர் மைத்திரி தனது முகநூல் பக்கத்தில் அற்புதமான குறிப்பு ஒன்றை பதிவேற்றி இருந்தார்.

“ நோக்கத்தை வெல்லவதற்காக பொறுமையுடன் உரிய நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்”. மைத்திரிபால சிறிசேன ( முகநூல் 2019-12-07) கோவிட் வைரஸ் பரவுவதற்கு முன்னர் மைத்திரி இந்த பதிவை இட்டிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் இவ்வாறு தன்னை மண்ணில் முட்டி மோதிக்கொள்ளும் என்பதை மைத்திரி எப்படி முன்கூட்டியே அறிந்திருந்தார்?. ஜனாதிபதியாக பதவிக்கு வந்த புதிதில் ஐக்கிய தேசியக் கட்சியை தனக்கு கேடயமாக இருக்காது என்பதை மைத்திரி அறிந்திருந்தார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்குரிய இடம் சுதந்திரக் கட்சியே என உணர்ந்தே அவர் இதனை செய்தார்.

ரணில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முயற்சித்த போது, மைத்திரி அது சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை தூக்கி எறிந்தார். திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கிகளை இந்திய – இலங்கை கூட்டு நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்கும் யோசனையை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்த மைத்திரி, யோசனையை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டார்.

அரச வளங்களை விற்பனை செய்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையல்ல எனக் கூறியே அவர் இவை அனைத்தையும் செய்தார். எனினும் தற்போது கோட்டாபயவின் அரசாங்கம் நாட்டின் தேசிய அரச வளங்களை ஏலத்தில் விட்டுள்ளது. கெரவலப்பிட்டிய மின் நிலையம் அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் தொடர்பில் ரணில் கொண்டு வந்த யோசனைக்கு அப்பால் சென்று அதன் நிர்வாகத்தை இந்தியாவுக்கு சாதமான முறையில் வழங்கியுள்ளது.

இந்த அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பாதுகாக்கும் அரசாங்கம். இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சுற்றி இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மைத்திரி தலைமைத்துவத்தை வழங்குவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலை வீசிய 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 12 லட்சம் வாக்குகளை பெற்றது. தற்போது ராஜபக்சவினர், அமெரிக்க மற்றும் இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் போது கிடைத்த 12 லட்சம் வாக்குகளை அதிகரித்துக்கொள்வது சுதந்திரக் கட்சிக்கு பெரிய விடயமாக இருக்காது. ராஜபக்சவினர் இதனை அறிவார்கள். இதனால், மைத்திரி மீது தாக்குதல் தொடுக்க ராஜபக்சவினர் அஞ்சுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மைத்திரியுடன் இருப்பதையும் அரசாங்கம் அரச வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக இடதுசாரிகளான சுதந்திரக் கட்சியினர் மைத்திரியுடன் இணையும் வாய்ப்பு உள்ளதையும் ராஜபக்சவினர் அறிவார்கள். மைத்திரி ராஜபக்சவினருக்கு எதிரான கூட்டணியை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை கொண்டு செல்வார் என்ற அச்சம் காரணமாகவே ராஜபக்சவினர் ஐக்கிய தேசியக் கட்சியை கொண்டு மைத்திரியை தாக்கி வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் 1947 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் அன்றில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசியலே நாட்டில் இருந்தது. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது ராஜபக்ச மற்றும் ராஜபக்சவினருக்கு எதிரான அரசியலாக மாறியது. ஐக்கிய தேசியக் கட்சியின் சரிவும், மகிந்த போரில் வென்றதும் இதற்கு காரணமாக அமைந்தது. இந்த ராஜபக்சவினருக்கு எதிராக அரசியலின் ஸ்தாபகர் மைத்திரி. கட்சி, நிற, இன, மத பேதமின்றி ராஜபக்ச அரசியல் எதிர்ப்பை களத்திற்கு கொண்டு வந்தே மைத்திரி 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றார்.

நாட்டில் தற்போது ராஜபக்சவினருக்கு எதிரான அரசியல் களத்திற்கு வந்துள்ளது. இயற்கையின் மாற்றம் மற்றும் ராஜபக்சவினரின் பலவீனமான ஆட்சியே இதற்கு காரணம். 2015 ஆம் ஆண்டு தான் உருவாக்கிய ராஜபக்ச எதிர்ப்பு அரசியல் அலை 2018 ஆம் ஆண்டு திரும்பிச் சென்று மீண்டும் வீச ஆரம்பித்துள்ளதால், மைத்திரி மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

கஷ்டப்பட்டு பணியாற்றிய பின்னர் அதன் உச்ச பயனை பெற பொறுமையாக இருக்க வேண்டும் என மைத்திரி சில காலங்களுக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நுழைந்து 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பங்களிப்பு செய்தார். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது அன்னப் பறவை தண்ணீரில் இருந்து பாலை பிரித்து எடுப்பது போல, பொதுஜன பெரமுனவில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரித்து எடுத்து வருகிறார்.

“ சில அத்தியாயங்கள் துன்பகரமானவை. சில அத்தியாயங்கள் சாகசமானவை. சவாலான அத்தியாயங்கள் இல்லாமல் இல்லை. ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சரியான நூலை சரியான நேரத்தில் எழுதுவார். ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் இறுதி அத்தியாயம் ஆச்சரியமானது”. இது கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைத்திரி தனது முகநூலில் பதிவிட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆரம்பித்திருப்பது மைத்திரியின் ஆச்சரியமான இறுதி அத்தியாயமோ என்று கூற தெரியவில்லை.
கட்டுரையாளர்  – உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!