தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை!

2019 இல் நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது இந்த நாட்டு மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்பட்டது தேசிய பாதுகாப்பு என்பதை இன்று பெரும்பாலானோர் மறந்துவிட்டனர் எனவும், எமது அரசாங்கத்தால் இதுவரை தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இன்று மக்களுக்கு தீவிரவாதத்தை பற்றி அச்சம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று அக்கிராசன உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள் அன்று பாரியளவில் இயங்கியது சிறைச்சாலை பேருந்துக்கு துப்பாக்கி சூடு நடத்தி அங்கு சிறைபாதுகாவலர்கள் மற்றும் சிறை கைதிகளை கொன்ற ஒரு யுகத்தை நாம் பார்த்தோம். பாதையில் சென்ற மக்கள் பாதாள உலகத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இறந்த ஒரு யுகத்தை நாம் கடந்துவிட்டோம்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த நிலையை மாற்ற எம் அரசாங்கத்திற்கு முடிந்தது. போதைப்பொருள் கலாச்சாரம் அன்று பெரிதும் காணப்பட்டது. நிறைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்கள்.

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் குழுக்கள் இலங்கையில் உருவாகி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை மாறியது.

விரைவாக இவற்றை இல்லாதொழிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். எமது பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் உளவுத்துறை பிரிவின் நடவடிக்கையால் இன்று இந்த நிலை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். அயல் நாட்டு உளவுத்துறை பிரிவினர் இது தொடர்பான தகவல்களை எமக்கு வழங்குகின்றனர். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பொலிஸாருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

சாதாரண மக்களுக்கு பயம் ,சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு பொலிஸார் என்றும் அவதானமாக செயற்பட வேண்டும். இதன் காரணமாக பொலிஸ் பிரிவிலும் பல மாற்றங்களை நாம் செய்துள்ளோம்.

எந்தவொரு பகுதியிலும் வாழும் மக்கள் பொலிஸாரின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக நாடுமுழுவதும் 100 பொலிஸ் நிலையங்களை புதிதாக நிர்மாணிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.
தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கபட்டுள்ளது. எனவும் தனது அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!