களனிதிஸ்ஸ அனல் மின் நிலையம் மூடப்படுகின்றது? – இன்று முதல் மின்வெட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ வளாகம் அமைப்பிலிருந்து அகற்றப்பட்டால் 300 மெகாவோட் திறன் இழக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே இன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்டப்படி இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இதற்கு இணையாக இன்று (18) முற்பகல் 10 மணியளவில் இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!