5 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட ஆலயங்களில் கவிந்த மக்கள்!

5 நாள் தடைக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் அதிகளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 5 நாட்கள் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தைப்பூச நாளான நேற்றும் முருகன் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    
இந்தநிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தரிசனம் செய்ய முடியாமல் இருந்த பக்தர்கள் இன்று காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. 5 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் இன்று சாமி தரிசனத்துக்காக திரண்டனர்.

இதன் காரணமாக கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி கோவிலுக்கு வருடந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பழனியை நோக்கி பாத யாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பல்வேறு மண்டபங்களில் தங்கி இருந்தனர். இன்று காலை நடை திறக்கப்பட்டதும் படிப்பாதை, யானைப்பாதை வழியாக காத்திருந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் அதிகாலையிலேயே சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் திரண்டனர். கோவிலில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்பு காசிக்கு இணையாக கருதப்படும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர்.
அதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவிலிலும் பக்தர்கள் காலையிலேயே திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!