மைத்திரியை விரட்ட வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அவர், நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டாம் என நான் கூறினேன். அதனை கவனத்தில் கொள்ளாது அந்த கட்சியுடன் இணைந்தனர். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றினேன்.

தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமையை அழித்து விட்டது. மிகவும் கவலைக்குரியது. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. யுத்தம் பயங்கரமாக நடைபெற்ற காலத்தில் நான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன்.

ஒருவர் கூறுவது மற்றுமொருவருக்கு தெரியவில்லை. காலையில் கூறுவதை மாலையில் மாற்றி விடுகின்றனர். பெரிய சிக்கல். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டனர்.

மொட்டு கட்சியுடன் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக கூறி வந்தேன். நாம் அழிந்து விடுவோம் என்று சுட்டிக்காட்டினேன். இதனை கூறியமைக்காக என்னை கட்சியின் அரசியல் சபையில் இருந்து விலக்கினர்.

என்னை அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கினர். நாங்கள் பல வருடங்களாக கூறியமை மைத்திரிபால சிறிசேன தற்போது கூறுகிறார். இந்த மனுஷனை விரட்ட வேண்டாமா? என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு மேற்கொண்ட விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சந்திரிக்கா நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஆணைக்குழுவிற்கு செல்லவில்லை. விசாரணை அதிகாரிகள் பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!