தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட ராஜபக்சவினர் நாட்டு வளங்களை விற்கின்றனர்

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட ராஜபக்சவினர் நாட்டின் வளங்களை விற்பனை செய்து, மக்களுக்கு நாட்டை இல்லாம் ஆக்கியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய வளமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் உடன்படிக்கை திரும்ப பெறுமாறு கோரி கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் பெறுமதியான வளங்களை ஒன்றென்றாக விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தின் கெடுதியான கொள்கைகளின் பிரதிபலனை நாடு எதிர்நோக்கி வருகின்றது. இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி துறையில் அரசாங்கம் கை வைத்துள்ளது. அவற்றை விற்பனை செய்து வருகிறது.

300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முக்கியமான கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மீது கை வைக்கப்பட்டு விட்டது. அதன் முக்கியமான பங்குகள் அமெரிக்காவில் இருந்து வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமெரிக்கரான பசில் ராஜபக்ச ஆகியோர் விற்பனை செய்துள்ளனர்.

மின்சார சபையின் ஊழியர் தற்போதும் அந்த உடன்படிக்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். இதற்கு நாங்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவோம். அரசாங்கம், துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க முயற்சித்து வருகின்றது.

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட எரிசக்தி அமைச்சர் அண்மையில் இந்திய நிறுவனத்துடன் உடன்படிக்கையை செய்து, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.

அதேபோல் பெறுமதியான கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றது. தேசப்பற்றை பூசிக்கொண்டே தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அப்படி தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், துறைமுக, மின் உற்பத்தி நிலையம், பெறுமதியான கட்டடங்கள், எண்ணெய் தாங்கிகள் ஆகியவற்றின் உரிமையை மக்களுக்கு இல்லாமல் ஆக்கியுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!