தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்களே தீர்வை வழங்க வேண்டும்!

இந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தாயகத்தில் தனித்துவ இறைமையுடைய இனமாக வாழ்ந்தார்கள், அந்த தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் கொலனித்துவ ஆட்சியாளர்கள் தான் என கொழும்புக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரவுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    
இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நேற்று கொழும்பில் அவரைச் சந்தித்து விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அப்போதே மேற்படி கருத்தை சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நடந்த சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல், தற்போதைய மனித உரிமைகள் நிலைமை, அரசியல் தீர்வு ஆகிய மூன்று அம்சங்கள் குறித்தே சம்பந்தன் இந்தச் சந்திப்பில் அதிகம் வலியுறுத்தினார்.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக்களில் தாமும் இந்த மூன்றையுமே வலியுறுத்தினார் என்றும், அவற்றை ஆக்கபூர்வாக அணுகுவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர்கள் கூறியமையைத் தாம் வரவேற்றார் என்றும் கொழும்புக்கு வருகை தந்த பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு சம்பந்தனிடம் தெரிவித்தார்.

இந்த விடயங்களில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற கொழும்பின் வாக்குறுதி சொல்லிலும், செயலிலும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தாங்கள் பார்த்திருக்கின்றார்கள் என்று தாம் இலங்கைத் தலைவர்களிடம் கூறினார் எனவும், அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு, சம்பந்தன் – சுமந்திரன் குழுவிடம் குறிப்பிட்டார்.

கொழும்பு – 07 இல் உள்ள பிரிட்டிஷ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் சாரா ஹூல்டன் அம்மையாரும் பங்குபற்றினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!