மக்கள் கொடுத்த ஆணையை ஒருபோதும் மீறமாட்டோம்!

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை மறந்துவிட்டு வழமையான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவே ஜனாதிபதி நினைத்துள்ளார். ஆனால், எம்மக்கள் எமக்கு கொடுத்த ஆணையை நாம் ஒருபோதும் மீற மாட்டோம் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
    
ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம், பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்ததற்கான காரணமென்ன என்பதை தெரிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கான பதிலை ஜனாதிபதி அளிக்கவில்லை என்றார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்யாது தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஒரே விடயத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதால் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்றார்.

அதேபோல் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் ஜனாதிபதிக்கு மாற்று சிந்தனையொன்று இருக்கும் எனவும், அது அவரது மனதில் இருந்து வெளிவரும் எனவும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளாக நாம் ஜனாதிபதியின் உரையில் எதிர்பார்த்தோம் என்றார்.
பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது, புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்குவது, சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இறுதியாக உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் அமைப்புகளையும் தமிழர்கள் நிராகரித்த நிலையில், அல்லது தமிழர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 74 ஆண்டுகளாக நாடு அடிப்படை கட்டமைப்பில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அதனை தீர்க்கும் விதமாக ஜனாதிபதியின் உரை இருக்கும் என எதிர்பார்த்தோம் என தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்கட்சியின் ஆசனங்களில் அமர, தமிழ் மக்களின் ஆணையை கேட்ட வேளையில், சமஷ்டி முறையில் தீர்வுகளை பெறுவது மற்றும் தமிழர் தேசத்தை அங்கீகரிக்க தமிழ் மக்கள் எமக்கு கொடுக்க ஆணையானது அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட ஆணையை விடவும் மேலானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!