நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    
அனிகா அட்டிக்கும், பாரூக் ஹசனாத் ஆகிய இரு பெண்களும், நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர். அதைத் தொடர்ந்து அனிகா அவருக்கு வாட்ஸ்அப்பில் அவதூறு செய்திகளை அனுப்பியதாக தெரிகிறது.

பாரூக், அனிகாவிடம் அவதூறு செய்திகளை நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்கும்படி கூறியும், அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாரூக் அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பிய அனிகாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் பாரூக் ஹசனாத்தால் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் நபிகளுக்கு எதிராக அவதூறு செய்ததாகவும், இஸ்லாத்தை அவமதித்ததாகவும், சைபர் கிரைம் சட்டங்களை மீறியதாகவும் அனிகா அட்டிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!