கரன்னாகொட கொலை செய்த தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவில்லை!

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம்பெற்று கொலை செய்த கரன்னாகொட விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதும் மனித உரிமைகளின் நிலைமையை வெளிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.
    
ஜனாதிபதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்திய வேளையில் சிரித்த முகத்துடன் இருந்தார், அதை பார்க்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நட்பாக இருந்த காலத்தில் அவரது முகத்தில் இருந்த சிரிப்பை எனக்கு அது நினைவுபடுத்தியது.

மேலும் அவரது உரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டதாகவே ஜனாதிபதி தெரிவித்தார். கொரோனாவினால் பாதிப்புகள் ஏற்பட்டமை உண்மையே ஆனால் எமது பொருளாதார வீழ்ச்சிக்கு அது காரணம் அல்ல.

மனித உரிமைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி கூறினார், தலைவராக நாட்டின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. ஆனால் வார்த்தைகளில் இதனை கூறினாலும் கடந்த காலங்களில் அது செயலில் இருக்கவில்லை. நாம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து அதனை நிறுத்த எடுத்த முயற்சியும் மனித உரிமை மீறல்தான்.
மனித உரிமையுடன் ஜனநாயகம் மற்றும் சட்ட சுயாதீனம் சமமாக கையாளப்பட வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் எத்தனை கைதுகள், குற்றபுலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்படுவது, சிறை கைதிகளை சுட்டுக் கொலை செய்தமை மனித உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அல்ல.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி சென்று கப்பம்பெற்று கொலைசெய்த கரன்னாகொட விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இங்கிலாந்தில் அரச குடும்பத்திலும் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது, இளவரசர் ஒரு பெண்ணுடன் தொடர்புபட்டதாக சர்ச்சையொன்று ஏற்பட்டதை அடுத்து விசாரணைகளுக்கு முன்னதாகவே அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்றி அவருக்கு வழங்கப்பட்ட அட்மிரல் பதவி பறிக்கப்பட்டது.

இங்கும் அட்மிரல் ஒருவர் 11 மாணவர்களை கொலைசெய்த வழக்கு விசாரணையில் இருக்கும் வேளையில் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கின்றது.இதுதான் இந்த நாட்டின் நிலைமையாகும்.
அதேபோல், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்கியுள்ளனர். நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டதுறைக்கும் இடையில் தலையீடுகள் இல்லாது சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை. அரசியல் அமைப்பை எவ்வாறு மாற்றினாலும் நாட்டின் பயணம் ஒரே மாதிரியே பயணிக்கின்றது. ஆகவே அரசியல் அமைப்பை மாற்றி ஆட்சியாளர்களை உறுதிப்படுத்துவது அவசியமில்லை மாறாக அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானதாக அமையும்.

எனவே இந்த மாற்றத்தை மக்களே மாற்றியமைக்க வேண்டும். புதிய அரசியல் பயணமொன்றை உருவாக்கினால் தான் இளம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!