கூட்டமைப்பு இறுக்கமாக இருந்தால் ஒருபோதும் தீர்வை நோக்கி பயணிக்க முடியாது!

தேசிய பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. நாடாக ஒன்றிணைந்து செயற்படுவதில் தமது கொள்கையை விட்டுக்கொடுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்குமானால் ஒருபோதும் தீர்வுகளை நோக்கி பயணிக்க முடியாது என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
    
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கூறுகையில்,

இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தன்னால் மட்டுமே முடியும் என ஜனாதிபதி எங்கேயும் கூறவில்லை, இதில் சகலரதும் ஒத்துழைப்பை அவர் எதிர்பார்க்கின்றார்.

இதுவே தலைவர் ஒருவரின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நெருக்கடிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒத்துழைப்புகளை வழங்காமல் மாறாக விமர்சனக் கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்.

இன்றைய நெருக்கடி நிலைக்கு கொவிட் வைரஸ் பரவலே காரணமாகும். இதனால் பல துறைகள் வீழ்ச்சி கண்டன, சகல பக்கமும் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் தடைப்பட்டது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிய அபிவிருத்தி தேவைப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யுத்தத்திற்கு பின்னர் மாகாணசபையை உருவாக்கிய தமிழ் தலைவர்கள் அதன் மூலமாக மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. மத்திய அரசாங்கம் ஒதுக்கும் நிதியை பயன்படுத்தவில்லை. அதில் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

தமிழர் தரப்பு தமது நிலைப்பாடுகளில் இருந்து விடுபட்டு அபிவிருத்தி மற்றும் ஏனைய சகல வேலைத்திட்டங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில் :-

இந்த நாட்டில் தமிழ் மக்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதை தமிழர் அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சகல மக்களையும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் நோக்கமே ஜனாதிபதிக்கு உள்ளது, அதில் தமிழர் தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெறுமனே விமர்சித்துக்கொண்டு இருப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. தமிழர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் கூட வடக்கு ,கிழக்கிற்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!