காவலர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்!

சுமார் 5 ஆயிரத்து 800 போலீசாரை கொண்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசார் முதல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழி வழியாக சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனரை நேரடியாக சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாக பதிந்து செல்லவேண்டும். இது கடினமான பணியாக இருப்பதால் போலீசாரின் நலன் கருதி இந்த ‘CLAPP’ என்ற செயலி (ஆப்) முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
    
போலீசார் தங்களிடம் உள்ள செல்போனில் தமிழ்நாடு காவல் ‘CLAPP’ என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக தற்செயல் விடுமுறை, ஈட்டிய விடுமுறை, மருத்துவ விடுமுறை, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி ‘ஆன்லைன்’ மூலமாக சமர்ப்பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரிகளுக்கு சென்றடையும். விடுமுறை ஆணை பெற்றுக்கொண்ட போலீசார் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
ஈட்டிய மற்றும் மருத்துவ விடுமுறைகளை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் அலுவலக விடுப்பு பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்பிற்கு பின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்து போலீஸ் துணை கமிஷனருக்கு (தலைமையிடம்) விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும். இந்த செயலியில் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் 3 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேர காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்ப தவறினால் படிப்படியாக போலீசாரின் கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளை சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி, போலீசாரின் விடுமுறை எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாக குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது. இணையதளம் வசதி இல்லாதவர்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள CLAPP V2 செயலி மூலம் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!