இவ்வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு!

நாட்டிற்கு அவசியமான புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருக்கின்றார். அதற்கமைய இவ்வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
    
அஸ்கிரியபீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு இன்னும் மூன்றுவருட கால அவகாசமும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலமும் இருக்கின்றது. அரசாங்கத்தினால் சிறந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்போது அதற்கான பாராட்டை தமக்குரியதாக்கிக்கொள்பவர்கள், மாறாக விமர்சனத்திற்குரிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள்.

மக்களால் விரும்பப்படாத தீரமானங்களை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஏற்படும். அவ்வாறான தீர்மானங்களை அரசாங்கத்திற்குள் இருப்பவர்களே விமர்சிக்கும் பட்சத்தில், அரசாங்கத்தினால் அதன் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையேற்படும்.

ஆளுந்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்குக் கூட்டாகக் கட்டுப்பட்டவர்களாவர்.

நாட்டிற்கு அவசியமான புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருக்கின்றார்.

அதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டவுடன் அவை பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும்.

அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் தீர்மானிக்கப்படும். இந்த செயற்பாடுகளை இவ்வருடத்திற்குள் முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

அதேவேளை தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு முன்னுரிமையளிக்கப்படும். அதனை முன்னிறுத்தி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு சாபமாக மாறியிருக்கக்கூடிய தற்போதைய தேர்தல் முறைமையில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இவ்விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால், தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு ஆதரவாக 90 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!