மற்றுமொரு அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ஜனாதிபதி – பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாடு சென்ற எத்தனோல் வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

குறித்த வர்த்தகரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், பின்னர் குறித்த அரசியல்வாதிகள் ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புலனாய்வு அறிக்கையை கோருவதற்கு தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி கடும் தீர்மானமொன்றை எடுப்பார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட சுசில் பிரேமஜயந்த ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நி்லையில் எந்தவொரு நேரத்திலும் தமது பதவிகளும் பறி போகலாம் என அமைச்சர்களும் ராஜாங்க அமைச்சர்களும் அச்சத்தில் உள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!