மின்சாரத்துறையில் மாபியா!

மின்துறையில் பல ஆண்டுகளாக தீவிர மாபியா இருப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மின்சாரப் பிரச்சினை திடீரென ஏற்பட்ட பிரச்சனையல்ல என்றும் தெரிவித்தார்.
    
காலி வித்யாலோக பிரிவேனா மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக மின்துறை பணிகளின் தொழில்நுட்ப பிரிவுகளில் பல சிக்கல்கள் உள்ளன என்றும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத துரதிஷ்டமான நிலையால் மக்கள் இருளில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மின்சார நெருக்கடி இல்லாத காலத்திலும் தனியாரிடம் இருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கு எத்தனை பில்லியன்கள் செலவாகும் என்பது இந்நாட்டு மக்களுக்குத் தெரியாது எனவும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இருந்த பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து ஒன்று சேர்ந்து மிக மோசமான இடத்திற்கு வந்துவிட்டன என்ற அவர், எண்ணெய் நெருக்கடி மற்றும் நிலக்கரி தொடர்பான பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள நிலைமை என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மற்றும் அரசியல் பிரிவினர் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதே முக்கியமான விடயமாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!