காட்டாட்சியை வீழ்த்த கரம் கோர்க்க வேண்டும்!

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
    
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வந்த பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது.

அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ஆம் படையணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

“இல்லை, இல்லை” என்ற கூக்குரலை விட இந்நாட்டில் இன்று எதுவும் இல்லை என்றாகி விட்டது. எண்ணெய் இல்லை. எரிவாயு இல்லை. பால்மா இல்லை. உரம் இல்லை. மருந்துகள் இல்லை. எதுவும் இல்லை. சொல்லப்போனால் இந்நாட்டில் இன்று அரசாங்கமே இல்லை.

உரம் இல்லை என்று கையை விரித்து மன்றாடும் விவசாயிகளிடம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, “உங்கள் நிலங்களில் நெல் விளைவிக்க முடியாவிட்டால், பாசி பயறு விளைவியுங்கள்” என்று கூறுகிறார். இது, “பாண் இல்லாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு கொடுங்கோல் அரசியை ஞாபகப்படுத்துகின்றது.

வெள்ளைபூண்டு ஊழலை கண்டு பிடித்து, அம்பலப்படுத்திய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் துசான் குணவர்தன, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையை எடுத்த நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!