அமெரிக்க கடலோர பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 39 பேர் மாயம்!

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 39 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நடுக்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டனர்.

இதையடுத்து அருகில் சென்று பார்த்த போது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடிய நிலையில் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்க கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
    
சம்பவம் தொடர்பாக மியாமி கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு ஆட் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த 21 ஆம் திகதி இரவு 39 பேரை ஏற்றிக் கொண்டு பகாமா தீவில் இருந்து புறப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மியாமி கடற்பகுதியில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை தவிர அனைவரும் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்தில் கனடாவில் இருந்த அமெரிக்காவிற்குள் ஆட் கடத்தல் கும்பலின் உதவியோடு நுழைய முயன்ற நான்கு இந்தியர்கள் கடும் பனியில் சிக்கி உயிரிழந்தமை பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!