இராணுவத்தினரை தமிழ் மக்களுடன் இணைத்து பலவித செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கு இந்த அரசு விரும்புகின்றது! :க. வி. விக்னேஸ்வரன்

இராணுவத்தினரை தமிழ் மக்களுடன் இணைத்து பலவித செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கு இந்த அரசு விரும்புகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பிருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (26) சமூக மட்ட அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கி வைத்த பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மக்களையும் இராணுவத்தையும் இணைத்து செயற்பட வைப்பதற்கு மற்றையவர்களது நிலைப்பாடு என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் நான் அதற்கு எதிரானவன். மக்களுடைய காணிகளை நாங்களே எடுத்து அதனை மக்களுக்கு பயன் தரக்கூடியவாறு மாற்றியமைக்க வேண்டும்.

மாறாக இராணுவத்தினரிடம் மக்களது காணிகளை வழங்க முடியாது. பிரதேச செயலர்கள் தமது பிரிவிற்குட்பட்ட காணிகளை ஏதோ ஒரு உபாயத்தின் மூலமாக அதன் உரிமையாளர்களை அடையாளங்கண்டு குத்தகைக்கு எடுத்து அதனை மக்களது தேவைக்காக பயன்படுத்தலாம்.

இங்கிருக்கின்ற மக்கள் தங்களுடைய காணிகளை தாங்களே பயன்படுத்தி அதன் மூலமாக வருமானத்தை எடுக்க வழியமைக்க வேண்டும். இந்த சிந்தனையை தங்களிடம் சேர்ப்பிக்க விரும்புகின்றேன்.

வருங்காலம் மிக மோசமாக அமையக்கூடிய சூழ்நிலையை நாம் எமது கண்களூடாக தற்போது காண்கிறோம். எனவே வருங்காலத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.                  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!