விஜயகலாவின் கூற்றை நியாயப்படுத்தும் கோத்தா!

மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவனை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு செல்வதே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ள கோத்தாபய, இதனையே நாட்டு மக்களும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மாத்தரை பாலட்டுவ என்ற இடத்தில் எளிய என்ற வெளிச்சம் அமைப்பினர் நாட்டின் சமகால அரசியல் நிலமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்திவரும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்தே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிபீடம் ஏறியது. ஆனால் இன்று படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. பாதாள உலகக் கோஷ்டியினர் தலைதூக்கியுள்ளன. போதைப்பொருள் வியாபாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. யாழ்ப்பாணத்திலும் இந்த கொடூரங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.

இதனையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் குறிப்பிட்டித்திருந்தார். இவ்வாறான நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தபோது இருக்கவில்லையென அவர் கூறியிருந்தாலும், உண்மையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் 2014 ஆம் ஆண்டு இறுதிவரை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் எந்தவொரு குற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை கூற விஜயகலா மறந்துவிட்டார்.

யாழ் குடாநாட்டில் மோசமடைந்துள்ள கொடூரங்களை கட்டுப்படுத்துவதற்கும் தற்போதைய ஆட்சியாளர்களால் முடியாது போயுள்ளது. ஆனால் எமது ஆட்சிக் காலத்தில் அவ்வாறான நிலமை காணப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் நாம் பெரும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

அனைத்துத் துறைகளிலும் நாடு சீரழிந்துள்ளது, அதனாலேயே தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மீண்டும் மக்கள் விரும்புகின்றனர்.

இந்த நாட்டு மக்கள் குறிப்பாக அபிவிருத்தியாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும், நாட்டின் தேசிய பாதுகாப்பாக இருந்தாலும், நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அவற்றை தொடர்ந்து உறுதியாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும் அவற்றை செவ்வனே நிறைவேற்றுவதற்கான தகுதி இருக்கும் தரப்பினரிடம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீள ஒப்படைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.

உங்களுக்குத் தெரியும் இந்த நாட்டில் வாழும் தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு பொய்களை கூறி அந்த மக்களை ஏமாற்றி, அந்த மக்களின் வாக்குகள் மூலம் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிபீடம் ஏறினர். அதேவேளை வெளிநாடுகளின் கடும் அழுத்தங்கள் காரணமாக பல்வேறு நிபந்தனைகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் இணக்கம் தெரிவித்தனர். இவ்வாறான பொய் வாக்குறுதிகளை வழங்கியது மாத்திரமன்றி சமூகத்தின் மத்தியில் பொய்களை பிரசாரப்படுத்தி அதிகாரத்திற்கு வந்த போதிலும் அவர்களிடத்தில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் வழிநடாத்தி செல்ல எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை. திட்டங்கள் கைவசம் இல்லை என்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னெடுத்துச் சென்ற அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாத கையறு நிலையில் இந்த ஆட்சியாளர்கள் உள்ளனர்.

விசேடமாக இந்த அரசாங்கத்திற்கு என்ன கொள்கைத் திட்டங்கள் இருந்தாலும் அந்த கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய நபர்கள் இந்த அரசாங்கத்தில் இல்லை. அதனால் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கவுள்ள புதிய ஆட்சியில் மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அனுபவமும், திறைமையும் உள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!