விஜயகலா கூறியது தவறு! – என்கிறார் சிவாஜிலிங்கம்

இராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பது தவறு என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

விஜயகலா மகேஸ்வரனது கருத்தின் அடிப்படையிலேயே தற்போது தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை எனக் கூறுவதற்கான முழு உரிமையும் அவருக்கிருக்கிறது என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், மீள விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாக வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்தால் அது தவறானது.

சுழிபுரத்தில் ஆறுவயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை, வட்டுக் கோட்டையில் தனது கணவர் முன்பாகவே கைகள் கட்டப்பட்டுக் குடும்பப் பெண்ணொருவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடுகின்றன.

இந்தச் சம்பவங்களால் மன விரக்தியடைந்த விஜயகலா மகேஸ்வரன் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவையின் போது விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது எந்த தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களோ எமது மக்கள் மத்தியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொரு அமைப்பல்ல. தேசிய இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திய போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அவர்கள் கொண்டிருந்த ஆழமான உறுதிப்பாட்டின் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மக்கள் சுதந்திரமாகத் தமது அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும் ஒரு பெண் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு வீதியால் செல்லுமளவுக்கு நிலைமைகள் காணப்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

விஜயகலா மகேஸ்வரன் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் தான் அவருக்கெதிராக பரப்பப்படும் இனவாதக் கருத்துக்களை எம்மால் நோக்க முடிகிறது. அவர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியைத் துறக்குமளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அவரது கருத்துத் தொடர்பான விசாரணை முன்னெடுப்புக்களும் இடம்பெறுகின்றன. எது எவ்வாறான போதும் அரசியலமைப்பை அவர் மீறவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமாகவும் கூட விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக குற்றஞ்சாட்ட முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!