பாகிஸ்தானில் சொந்த குடும்பத்தை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

பாகிஸ்தானில் மொபைல் வீடியோ கேமுக்கு அடிமையான 14 வயது சிறுவன், தமது தாயார் உட்பட மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த சிறுவனின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட விளையாட்டில் ஈர்க்கப்பட்டு அதிக நேரம் விளையாடி வந்த அந்த சிறுவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
    
லாகூரில் வசித்து வந்த 14 வயது சிறுவன் Zain Ali பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வேலையாள் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் சடலங்களை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த சிறுவனையும் கைது செய்தனர்.

குறித்த விளையாட்டு காரணமாக உளவியல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. விளையாட்டில் ஒரு பணியை நிறைவேற்றத் தவறியதால், சிறுவன் தனது தாயின் கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், 45 வயதான தமது தாயார் நஹித் முபாரக் மற்றும் இரு சகோதரிகள், ஒரு சகோதரர் என நால்வரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன், கழிவு நீர் ஓடையில் துப்பாக்கியை வீசியுள்ளான். இரவு வீடு திரும்பிய சிறுவன், தூங்க சென்றுள்ளான்.

பொலிஸ் விசாரணையில், விளையாட்டின் ஒருகட்டத்தில் அவர்களை கொலை செய்தால், அந்த கட்டம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் உயிருடன் திரும்புவார்கள் என தாம் நம்பியதாக குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

மேலும், குறித்த விளையாட்டில் ஈர்க்கப்பட்டதாலையே, தாம் தமது தாயார் உட்பட அனைவரையும் சுட்டுக்கொன்றதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

முதலில், தாம் தூங்கிப் போனதாகவும், வீட்டில் என்ன நடந்தது என்று தமக்கு தெரியாது எனவும் பொலிசாரிடம் நாடகமாடிய சிறுவன், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!