10 வயதில் பெற்றோருக்கு பெருமை சேர்த்த வீர மகள்!

இன்றைய நாட்களில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதையொட்டி பலர் தினமும் சைக்கிள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக இன்றைய இளைஞர்கள் அதிகபட்சம் சராசரியாக 50 கிலோமீட்டர் தான் சைக்கிள் பயணம் செய்கின்றனர்.
    
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே எனும் நகரத்திலுள்ள பல்கும் கிராமத்தைச் சேர்ந்த ‘சாய் பாட்டீல்’ என்ற 10 வயது சிறுமி ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் பயணம் செய்து 38 நாட்களில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இந்த சைக்கிள் பயணத்தை டிசம்பர் 16-ல் காஷ்மீரில் ஆரம்பித்து ஜனவரி 20 அன்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.

சாய், ஆறு வயதாக இருந்தபோதே சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீந்துவதில் ஆர்வத்தைக் கொண்டுள்ளார். தற்போது கோவிட் -19 பெருந்தொற்று கால ஊரடங்கைப் பயன்படுத்தி தந்தை சைக்கிள் பயிற்சி செய்வதில் உதவியும், தாய் உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்வதில் உதவியும் என இருவருமே சேர்ந்து அந்தச் சிறுமிக்குப் பயிற்சி அளித்து இப்பயணத்தை வெற்றியுடன் முடித்துக் காட்டியுள்ளனர். இவ்வாறு சைக்கிள் பயணங்கள் செய்வதென்பது அவரது தந்தையின் கனவு என்றும் அதைத் தான் மேற்கொண்டு செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

அந்தச் சிறுமியின் தந்தை ஆஷிஷ் பாட்டீல் கூறுகையில் “சாய் தனது இலக்கிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பவர் மற்றும் தினசரி வேலைகளைச் சரியாகச் செய்பவர். ஸ்ரீமா வித்தியாலயாவின் மாணவரான அவர் இந்த பயணத்தை இலக்காகக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயிற்சி செய்து வருகிறார். அதே நேரத்தில் தனது பள்ளி வீட்டுப்பாடம் மற்றும் பிற நடவடிக்கைகளையும் சரியாக நிறைவு செய்கிறார். கடந்த ஆண்டும் கூட அவர் தனியாக லடாக் சென்றார்”

மேலும் அவர் கூறுகையில் “இந்தியாவில் கிழக்கு முதல் மேற்கு வரை சைக்கிள் பயணத்தைத் தொடங்கவும், பின்னர் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்குச் சுழற்சி முறையில் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். சரியான ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த இலக்கை படிப்படியாக நிறைவு செய்வோம். மகாராஷ்டிராவின் பல பகுதிகளில், அவரது துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புக்காக மக்கள் அவரைப் பாராட்டினர். அவளைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.” என்று 10 வயது சிறுமியான சாய் பாட்டீலின் தந்தைக்குக் பெருமையுடன் கூறியிருந்தார். சிறுமியின் இச்செயலை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!