ஒன்ராறியோவில் பரபரப்பு: கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்!

கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பனியில் வெளியே தனித்து விடப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயல், பள்ளி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுவதாக தொடர்புடைய சிறுவனின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்ராறியோவின் பீற்றர்பரோ பகுதியில் குடியிருக்கும் ஜெனிபர் ஹாப்கின்ஸ் என்பவரே பள்ளியில் தமது 5 வயது மகனுக்கு ஏற்பட்ட துயரம் தொடர்பில் செய்தி ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
    
கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், சிறுவன் சக மாணவர்கள் சிலருடன் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பனியில் விளையாடியுள்ளான். ஆனால், விளையாட்டு நேரம் முடிந்ததும் குறிப்பிட்ட சிறுவன் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படாமல் தனித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுவன், இன்னொரு வாசல் வழியாக நடந்தே வீடு வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று வெப்பநிலை – 12 டிகிரி என பதிவாகியிருந்ததாகவும், சிறுவன் அழுதபடி கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்ததாக தாயார் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும், ஆனால் அவர்களின் பதில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் வரவழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பீற்றர்பரோ பொலிசாருக்கு தகவல் தெரிவித்து உதவி கோரிய நிலையில், நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளதாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டுகள் மொத்தமும் மறுத்துள்ளதுடன், கதவுகள் மூடப்பட்டு, திறக்காமல் இருந்துள்ளது என்பது தவறான குற்றச்சாட்டு எனவும் அவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!