நான் செய்யாத ஒன்றுக்காக என்னைத் திட்டுகிறார்கள் – கடும் மனவருத்தத்தில் பசில் ராஜபக்ச

யாரோ பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்தும் தாம், அனைவரிடமும் திட்டு வாங்க நேரிட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. கடன் பெற்றுக்கொள்ளும் போது திட்டு வாங்கிய நிதி அமைச்சர்களை பார்த்திருப்பின்றீர்கள், நான் பெற்ற கடன்களை திரும்ப செலுத்துகின்றேன் அதற்கும் திட்டுகின்றனர்.

கடன் திரும்பச் செலுத்தும் நிதி அமைச்சர் திட்டு வாங்க நேரிட்டுள்ளது. நாம் கடன் செலுத்துகின்றோம் என்றே திட்டுகின்றனர்.

அண்மையில் 500 டொலர் கடன் செலுத்த நேரிட்டது. இது நாம் பெற்றுக்கொண்ட கடன் அல்ல. இந்த கடனை யார் பெற்றுக்கொண்டார்கள் என்பது எனக்கே தெரியாது? இதே விதமாக இந்த ஆண்டிலும் பெருந்தொகை கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த ஆண்டில் மொத்தமாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அனைத்து கடன் தொகைகளையும் நாம் செலுத்துவோம், இதனை மிகவும் பொறுப்புடன் நான் கூறுகின்றேன். நான் எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். நாம் கடன் செலுத்தும் போது அது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இந்த தலைமுறையில் உங்களினால் ஆட்சி பீடம் ஏற முடியாது. எனினும் எப்போதாவது ஆட்சிக்கு வந்தால் கடன் இல்லாத நிலை உங்களுக்கு இருக்கும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!