பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி மூடப்பட்டது: சோகத்தில் வாடிக்கையாளர்கள்!

பிரித்தானியாவில் பல போர்கள், கொள்ளை நோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் கூட தாக்குப்பிடித்த மிகப் பழமையான மதுபான விடுதி (Pub) தற்போது முதல் முறையாக மூடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செயின்ட் அல்பான்ஸில் கடந்த 1,229 ஆண்டுகளாக இயங்கிவந்த பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் (Ye Olde Fighting Cocks).
    
இதனை கிறிஸ்டோ டோஃபாலி (Christo Tofalli) என்பவர் நடத்திவந்தார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் இங்கிலாந்தின் பழமையான பப் ஆகும், இது கி.பி 793-ல் கட்டப்பட்டது.

இத்தனை ஆண்டு காலம் நடத்தப்பட்டுவந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க விடுதி, தற்போது முதல் முறையாக COVID-19 தொற்றுநோய் காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்ததால் மூடப்பட்டது.
இது தற்போது மூடப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத பலர் இந்த கூற்றை மறுக்கின்றனர். ஒரு சமூக ஊடக பதிவில், புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த மதுக்கடை மீண்டும் திறக்கப்படும் என்று St Albans-ல் வசிக்கும் சில மக்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், கிறிஸ்டோ டோஃபாலி தனது Facebook பக்கத்தில், தனது குழுவுடன் சேர்ந்து, பப்பைத் தொடர்ந்து வைத்திருக்க எல்லாவற்றையும் முயற்சித்ததாகவும், இருப்பினும், கடந்த இரண்டு வருடங்கள் விருந்தோம்பல் துறையில் பெரும் சரிவு சந்தித்த நிலையில், பெரும் நஷ்டமடைந்து மூடிவிட்டதாகவும் அறிவித்தார்.

வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அவர்கள் செலவுகள் மற்றும் உயரும் கட்டணங்களை நிர்வகித்து வந்ததாகவும், ஆனால், மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் அனைத்து கனவுகளையும் அழித்துவிட்டது என்று கூறியிருந்தார்.

தனது பதிவை முடித்த அவர், கடினமான காலங்களிலும் பழமையான பப்பிற்கு வருகை தந்த தனது ஊழியர்கள் மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் மூடப்பட்டதன் பாதிப்பைக் குறைக்க, தற்போது மதுபான ஆலையான மிட்செல் மற்றும் பட்லருடன் (Mitchell and Butler) இணைந்து பணியாற்றி வருவதாக டோஃபாலி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!