இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது!

மீனவர் பிரச்சினையால் எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்
    
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடுவது நியாயமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினையால் எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்த அவர், சகோதரத்துவம், நட்பு பாதிக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என குறிப்பிட்டார்.

எனவே பூகோள அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாத வகையில், கடல் எல்லைகளின் வளங்களை, சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் இந்தப் பிரச்சினையை நாம் தொடர்ச்சியாக தீர்த்து வருகிறோம் என்றார்.

ஆனால் நெருக்கடி ஏற்படும் முகாமைத்துவம் செய்ய முடியாத பிரச்சினை ஏற்படும். மக்கள் உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை ஏற்படும். ஆனால் இந்திய கடற்படையினரும் இலங்கை கடற் படையினரும் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர் என குறிப்பிட்டார்.

நாடு என்ற ரீதியில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கடற்படையினர் எமது கடல் வலயத்துக்குள் எமது நாட்டு பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாத்துகொள்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பர் என்றார்.

எனவே இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இராஜதந்திர உறவு பாதிக்காத வகையில் செயற்படுவோம் என தெரிவித்த அமைச்சர், உணர்ச்சி வசப்படும் மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்காது இது தொடர்பான விடயங்களை வெளியிடும் போது, விசேடமாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!