சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பி அனுப்பப்பட்ட 13 பேரும், அண்மைய நாட்களில், கடலில் இடைமறிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

‘குடியுரிமை பெறாத இவர்கள் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்களல்ல. அவுஸ்ரேலியாவில் சட்டரீதியாக தங்கியிருக்க தகுதியற்றவர்கள். சட்டரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்ய முனையும் எவரும், அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கான தெரிவைக் கொண்டிருக்க முடியாது.

சட்டவிரோதமாக வருபவர்களை தடுப்பதில் மாத்திரமன்றி, சட்டவிரோதமாக கடல்வழியாக வந்தவர்கள், பாதுகாப்பு பெறுவதற்குப் போதுமான காரணமில்லை என்று கண்டறியப்பட்டால், மேலதிக குடியுரிமை விடயங்கள் நடைபெறாது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை அகற்றுவதற்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.” என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: , ,