நத்தைவேகத்தில் சிறிலங்காவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியது ரஷ்யா

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 32 தொன் உதவிப் பொருட்களை விமானம் மூலம் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக, ரஷ்யாவின் சிவில் பாதுகாப்பு, அவசர மற்றும் அனர்த்த உதவி அமைச்சின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் பெரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், 32 தொன் உதவிப் பொருட்களை ஐஎல்-76 ரக சரக்கு விமானத்தில் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. மொஸ்கோவில் இருந்து இந்த விமானம் நேற்று கொழும்புக்கு புறப்பட்டது.

நகர்த்தக்கூடிய மின்சார உற்பத்தி நிலையங்கள், கூடாரங்கள், கோப்பைகள் என்பன இந்த உதவிப் பொருட்களில் அடங்கியுள்ளன.

கடந்த மே மாதம் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாகவே பல நாடுகள் உதவிப் பொருட்களை அனுப்பியிருந்தன. எனினும் ரஷ்யா மிகத் தாமதமாக, இரண்டரை மாதம் கழித்தே, உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

Tags: ,