பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய கோரி கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப் போராட்டம் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது.
    
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த கையெழுத்து போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,

பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடு முழுவதிலும் உள்ள மக்களின் மூலமாக தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பெப்ரவரி 3 ஆம் திகதி இதனை முல்லைத்தீவில் ஆரம்பித்தோம். அதன் பின்னர் பல்வேறு நகரங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பிலும் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கேயும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன மத மற்றும் அரசியல் கட்சி பேதம் எதுவும் இல்லாது இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.

1979 ஆம் ஆண்டு ஆறுமாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட சட்டமே இதுவாகும். எனினும் இப்போது 42 ஆண்டுகளுக்கு மேலாக பலருக்கு அநீதியை இழைத்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக மிக மோசமாக பயன்படுத்தப்பட்டதை போன்று, சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதையும் தாண்டி இப்போது அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை யார் முன்வைத்தாலும் அவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் கையாளப்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சட்டத்தை நீக்குவோம் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளனர். அதனை நிறைவேற்ற வேண்டும். அதை செய்யாது கண்துடைப்பு நாடகமாக பயங்கரவாத திருத்த சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அந்த திருத்த சட்டமூலத்தில் எந்த திருத்தமும் கிடையாது. ஆகவே அதனை கைவிட்டு பயங்கரவாத தடை சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாக இந்த வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!