திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே? – பன்னீர் செல்வத்தை கலாய்த்த ராமதாஸ்!

அ.தி.மு.க மூன்று அணிகளாக இயங்கி வரும் நிலையில் அந்த அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வார்த்தை மோதல்கள் மட்டும் இருந்த நிலையில், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளனர் பன்னீர்செல்வம் அணியினர். இதனிடையே, சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இருப்பதாக நீண்ட நாள்களாகவே கூறப்பட்டு வருகிறது.

சேகர் ரெட்டி சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய டைரியில், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெற்றதாக கூறப்பட்டது.மேலும், திருப்பதிக்குச் சென்றபோது சேகர் ரெட்டியும், பன்னீர்செல்வமும் இணைந்து எடுத்த போட்டோவும் வைரலாகி வந்தது. இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன், ‘சேகர் ரெட்டிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது’ என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறியிருந்தார்.இதையடுத்து, “சேகர் ரெட்டிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்பு குறித்து யார் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.இந்த சம்பவம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே?” என்று கூறியுள்ளார்.

Tags: