இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழக மீனவர்கள் 47 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

 நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள்   56 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய  மத்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கையின்  பின்னர்    ஜனவரி    மாதம் 9 ஆம் திகதி  குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு   விடுவிக்கப்பட்ட  இந்திய மீனவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில்     அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த  மீனவர்கள்     சிகிச்சை மத்திய நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்களுள் 9 பேர் கடந்த  வாரம் தாயகம் திரும்பியிருந்த  நிலையில்  ஏனைய  47 மீனவர்கள் இன்று அதிகாலை  தாயகம் திரும்பியுள்ளதாக இந்திய   ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான  விமானமூடாக   இன்று அதிகாலை 4.20 அளவில்   சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

ராமஸ்வரம் பகுதியைச் சேர்ந்த   27 மீனவர்களும் புதுக்கோட்டை  ஜெகதாப்பட்டிணம்  20 பகுதியைச் சேர்ந்த  மீனவர்களும் இவ்வாறு தாயகம்  திரும்பியுள்ளனர்.

அத்துடன்  தமிழ்நாடு மீன்வளத்துறையினர்  சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!