காதலுக்கு கண் இருக்கிறது.. அறிவும் இருக்கிறது..

பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.

காதலுக்கு கண் இருக்கிறது.. அறிவும் இருக்கிறது..
காதல்வசப்படும் பெண்ணுக்கு அவளது காதலன் நல்லவனாக அமையாவிட்டால், பெரும்பாலும் அந்த காதலே அவளது வாழ்க்கையை காலியாக்கிவிடும். அந்த காதலன் ஒரு களவாணி என்று பாதியில் தெரிந்தால்கூட அவளால் பின்வாங்க இயலாது. ‘கல்யாணம் செய்துகொண்டு அவனை திருத்திவிடுகிறேன் பாருங்கள்’ என்று சவால்விட்டுக்கொண்டு செயலில் இறங்கி விடுவாள். இப்படியெல்லாம் காதலுக்கு தப்புத்தப்பாக இலக்கணம் கற்பித்து கண்ணை மூடிக்கொண்டு வாழ்க்கையை இருட்டாக்கிக் கொண்ட பெண்கள் ஏராளம்.

காதல் ஒருவழிப் பாதையல்ல. இருவரிடமும் உண்மைதேவை. ஒருவர் உண்மையாக இருக்க மற்றவர் அதை பலவீனமாக நினைத்து ஏமாற்ற முற்படும்போது உண்மையானவர் சுதாரித்துக்கொண்டு விலகிட வேண்டும். காதல் சக்தி மிகுந்தது. அது உண்மையாக இருந்தால் சுகமானது. பொழுதுபோக்காக இருந்தால் சோகமானது.

உண்மையில்லாத காதலரை மறப்பது கஷ்டம்தான். அதற்காக ஏற்கக்கூடாத காதலை ஏற்று, வாழ்க்கையை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. கவிஞர்கள் காதலைப் பற்றி ஏராளமான கற்பனைகளை உதிர்த்திருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையோடு ஒத்துப்போகாது.

பெண்களிடம் தவறான எண்ணத்தோடு பழகும் ஆண்கள்கூட அந்த நெருக்கத்திற்கு காதல் என்று பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.

தகவல் தொடர்பு சாதனங்களை கையாளுவது எளிதாகிவிட்டதால், தடம் மாறிய ‘காதல்’ சகஜமாகிவிட்டது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழித்துக்கொள்ளும்போது நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து பழைய விஷயங்களை மறந்துவிட வேண்டியதுதான். அதையே நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கக் கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யவும் கூடாது.

இப்போது பணத்திற்காகவும் சிலர் காதல் வலை வீசுகிறார்கள். அதில் சிக்கிக்கொள்ளக்கூடாது. பெண்களில் சிலர் வலைதளங் களின் வழியாக வசதியான ஆண்களை காதலித்து வசமாக சிக்கவைத்து பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். காதல் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு பணத்தை இழந்தவர்கள் அப்படிப்பட்ட போலியான காதலை விட்டு விலகி பணத்தையும், எதிர்காலத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். காதல் புனிதமானதுதான். ஆனால் அதன் பெயரை பயன்படுத்துபவர்களும் புனிதமாக இருக்கவேண்டும்.

அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்துக் கொண்டிருந்த திலீப்பும், அனிதாவும் காதலித்தார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று பிரிந்துவிட்டார்கள். அவனிடம் போதைப்பழக்கம் இருப்பதை தெரிந்துவிட்ட நிலையில் அனிதா உறவை முறித்துக்கொண்டாள். அதே வேகத்தில் வேறு ஒருவரை தேர்வு செய்து திருமணமும் செய்துக்கொண்டாள். அவளது அதிரடியான முடிவை அனைவரும் பாராட்டினார்கள்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும்போது அது ஒரு கூட்டு முயற்சியாக அமைகிறது. பல்வேறு விதமாக அந்த ஜோடியை பற்றி ஆராய்கிறார்கள். ஆனால் காதல் இருவேறு மனிதர் களின் தனிப்பட்ட முயற்சியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள்ளே ரகசியமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். காதல் என்ற பெயரில் குறைகளை மூடிமறைக்கிறார்கள். அதில் தெளிவுக்கு வராமல், ‘காதலுக்கு கண்இல்லை’ என்றுகூறி எல்லா குறைகளையும் தங்களுக்குள் அங்கீகரிக் கிறார்கள். அதனால்தான் பெரும் பாலான காதல் தோல்வியடைகிறது.

பெண், காதலிக்கும்போது காதலனிடம் இருக்கும் குறைகளை எல்லாம் கண்டுகொள்ளாமலே விட்டுவிடுகிறாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அதை எல்லாம் சுட்டிக்காட்டுகிறாள். கணவனான அவன் அப்போது, ‘இதை எல்லாம் தெரிந்துகொண்டுதானே என்னை காதலித்தாய். இப்போது மட்டும் ஏன் குறைகண்டுபிடிக்கிறாய்?’ என்று எதிர்கேள்வி கேட்கிறான்.

காதலில் இந்த நிலை மாறவேண்டும். காதலிக்கும்போதே இருக்கும் குறைகளை பற்றி இருவரும் பேசி, அதை களைய வேண்டும். களைந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். களைய முடியாவிட்டால் அங்கேயே காதலுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுவது நல்லது. குறைகளோடு ஏற்றுக்கொள்வது நிறைவான வாழ்க்கையாய் அமையாது.

காதல் என்பது ஒரு எல்லையோடு நின்று விடும் விஷயமல்ல. அதன்பிறகு திருமணம், வாழ்க்கை, குடும்பம், எதிர்காலம் என்று விரிவடையும். அதை புரிந்துகொண்டு பெண்கள் காதல் விஷயத்தில் அறிவுக்கூர்மையுடன் செயல்படவேண்டும். உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து அறிவை மழுங்கடித்துக்கொள்ளக்கூடாது. காதலுக்கு கண் இருக்கிறது, அறிவும் இருக்கிறது என்பதை பெண்கள் நிரூபிக்கவேண்டும்.

Tags: ,