சித்திரைப் புத்தாண்டு வரை ரயில் பாதையை மூட வேண்டாம்!

சித்திரை புத்தாண்டு வரை அநுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான புகையிரத பாதையை மூட வேண்டாம் என புகையிரத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
    
மருதானையில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிரத பெட்டிகள் மற்றும் புகையிரத என்ஜின்களை புகையிரத போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ முன்னெடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செயற்திட்டத்தில் பாரிய நிதிமோசடி இடம்பெறவுள்ளது.இச்செயற்திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம்.

செட்டிக்குளம் தொடக்கம் தலைமன்னார் வரையிலான புகையிரத பாதையிலும்,ஓமந்தை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையிலும் சமிஞ்சை கோளாறு காணப்படுகிறது.தற்போது மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான பாதை நிர்மானிப்பிலும் அவ்வாறான தன்மை காணப்படும்.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி பணிகளினால் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் அநுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான புகையிரத பாதையை மூட புகையிரத திணைக்களம் தீர்மானித்தது.

சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு தமிழர்கள் தங்களின் சொந்த பிரதேசங்களுக்கு செல்வதால் எதிர்வரும் 1ஆம் திகதி அநுராதபுரம்- வவுனியா வரையான புகையிரத பாதையை மூடவேண்டாம் என புகையிரத திணைக்களத்திடம் வலியுறுத்தினோம்.

எமது கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி அநுராதபுரம் -வவுனியா வரையான புகையிரத பாதையை தற்காலிகமாக மூடுவதாக திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.சித்திரை புத்தாண்டு நிறைவு பெறும் வரை அநுராதபுரம்-வவுனியா புகையிரத பாதையை மூட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!