சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீதான நம்பிக்கை சிதைவு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்தும் தடுக்கத் தவறியமைக்காக விசேட தீர்ப்பாய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் விடுவிக்கப்பட்டமை, நீதித்துறையின் தரம் தொடர்பான பாரிய சிக்கலைக் காட்டுகிறது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாறான சம்பவங்கள் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீதான நம்பிக்கை சிதைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
    
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் எம்.பியான அஜித் பீ பெரேரா மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்றும் இந்த விடயத்தில் நீதித்துறையின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து கேள்வியெழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

800 குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை எனவும் யாரும் நீதிமன்றத்தில் நிற்க மாட்டார்கள் என்றும் வலியுறுத்திய அவர், ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் அரசியல்வாதிகளின் நற்பெயர், விடுதலையால் மேலும் அழித்துவிடும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!