வாக்குப்பதிவில் சரிவு: தேர்தலை மக்கள் புறக்கணிக்கிறார்களா?

சென்னை மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உட்பட இதுவரை நடந்த தேர்தல்களிலேயே தற்போது நடைபெற்ற தேர்தலில் தான் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் 60.70 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக சென்னையில் 43.59% வாக்குகள் மட்டுமே பதிவானது. 150 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில், கடந்த 2011ஆம் ஆண்டு கூடுதலாக 50 வார்டுகள் சேர்க்கப்பட்டன. இதனையடுத்தே 200 வார்டுகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 % வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 % வாக்குகளும் பதிவாகின. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 60.47% , 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 59.01 % வாக்குகளும் பதிவானது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட 59.06% வாக்குகள் பதிவாகின. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் சென்னையில் 50% கீழாக வாக்குப்பதிவு குறைந்ததே இல்லை.. ஆனால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் தலைநகரில் வெகுவாக சரிந்திருக்கிறது.

அதோடு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 44லட்சத்து 17ஆயிரமாக இருந்தன. ஆனால் தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 61 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் வாக்குப்பதிவு 10% குறைந்திருக்கிறது. சென்னையில் சராசரியாக பதிவாகும் 55% வாக்குகள் கூட இந்த முறை பதிவாகவில்லை.. இதற்கு என்ன காரணம் என்பதே அனைத்துத் தளங்களிலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. தங்களை ஆளப்போகும் பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் கூட மக்கள் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!