டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, ஏற்கனவே நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களில் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட மாகாண ஆளுனரோ, முதலமைச்சரோ அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று வட மாகாண சபை கூடிய போது, டெனீஸ்வரனுக்கு அமைச்சர்கள் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுப்பினர் சயந்தன் சுட்டிக்காட்டினார். அப்போது, இந்த விடயம் தொடர்பாக கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

தாம் இந்த விடயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்தார்.

இதனால் உறுப்பினர்களுக்கிடையில் காரசாரமான விவாதங்கள் நடந்தன.

இதன்போது, இந்த விடயம் தொடர்பாக, ஆளுனரின் உத்தரவுக்காக காத்திருப்பதாக, அவைத் தலைவர் அறிவித்தார்.

இந்த விவகாரத்தினால் அவையில் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், முதலமைச்சருக்கு அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களில் எவரையும் தம்மால் நீக்கவோ, புதிய ஒருவரை நியமிக்கவோ முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளுனருக்கே அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவரே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆளுனருக்கே அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் இருக்கிறது என்ற வியாக்கியானம், அதிகாரப் பகிர்வுக்கு முரணானது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் தாம் உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விரைவில் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, டெனீஸ்வரன் அமைச்சர்கள் வாரியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால உத்தரவினால், ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆராய வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபையின் 19 உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து அவைத் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, அவையில் நீதிமன்றத் தீர்மானங்கள் பற்றி விவாதிப்பது முறையாகாது என, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஆளுனரும், முதலமைச்சரும் நடைமுறைப்படுத்த தவறினால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சட்டமே கூறும் என்று டெனீஸ்வரன் அவையில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!