வடக்கின் நிலைமைகளை பார்வையிட வருகிறார் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்

வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 28ஆம் நாள் தொடக்கம் 29ஆம் நாள் வரை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வடக்கிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக கடந்தவாரம் கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

இதன்போது வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே, வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அஸ்கிரிய பீடாதிபதி வரும் 28, 29ஆம் நாள்களில் வடக்கில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Tags: ,