சிறிலங்கா வெளிவிவகார செயலராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த காரணத்தையும் வெளிப்படுத்தாமல், கடந்த மாதம் 29ஆம் நாள் சிறிலங்கா அதிபர் வெளியிட்ட உத்தரவில், வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசத்தையும், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக எசல வீரக்கோனையும் நியமிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, 2004ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில், தூதுவராகப் பணியாற்றிய பிரசாத் காரியவசம், நாடு திரும்பி புதிய பதவியை ஏற்கவுள்ளார்.

1981ஆம் ஆண்டு சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் இணைந்த பிரசாத் காரியவசம், ஜெனிவா, நியூயோர்க், றியாட் நகரங்களில் பல்வேறு இராஜதந்திரப் பதவிகளை வகித்தவர் என்பதுடன்,இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,