காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்களா? சர்ச்சையை ஏற்படுத்தும் ஞானசாரர்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமாக காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் வரவில்லை என்றால் அவர்கள் இல்லை என்றுதானே அர்த்தம் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் விடயங்களை நாம் வேறு விதமாக கையாள வேண்டும். யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலும் இரண்டு தரப்பிலும் காணாமல் போயுள்ளனர். ஆகவே யுத்தம் முடிந்து நீண்ட காலமாகிவிட்டது. இப்போதும் இந்த பிரச்சினைகளை தோண்டிக்கொண்டிருக்க முடியாது.

காணாமல் போனோர் பற்றிய விவகாரம் பாரதூரமானதாக உள்ளது. நாம் வடக்கிற்கு சென்ற வேளையில் காணாமல் போனோரின் உறவுகள் வந்து எம்மைச் சந்தித்தனர். தமது பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு எம்மிடம் முறையிட்டனர்.

ஆனால் இதற்கு எம்மால் என்னதான் செய்ய முடியும். அரசாங்கம் நேரடியாக ஒரு பதிலை கூறும் வரையிலும் அவர்களின் கோரிக்கைகளும் முறைப்பாடுகளும் இருந்துகொண்டே இருக்கும். வடக்கிற்கு யார் சென்றாலும் அவர்கள் முறையிடுகின்றனர்.   இவர்கள் ஒரு அமைப்பாக செயற்படுகின்றனரா எனவும் எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!