நேபாளத்தில் சுஸ்மா – வசந்த சேனநாயக்க சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூடன் சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேபாளத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

வங்காள விரிகுடா நாடுகள் அங்கம் வகிக்கும், பிம்ஸ்ரெக் அமைப்பின், வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட மாநாடு கடந்த வியாழக்கிழமை நேபாளத்தின் காத்மண்டு நகரில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில், பங்கேற்கும் சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழுவுக்கு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்றும், எனினும், பரஸ்பர உறவுகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது என்றும் நேபாளத்துக்கான சிறிலங்கா தூதுவர் வெல்லகே சுவாமலதா பெரேரா தெரிவித்துள்ளார்.

பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு, கலாசார தொடர்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக, இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Tags: ,