ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரம்!

ஈஸ்டர் தாக்குதலில் நீதியை பெற்றுக்கொடுக்க தவறிய காரணத்தினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
    
43 ஆவது படையணியின் மாவட்ட சம்மேளனம் நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் மழை இல்லாமை போன்ற இயற்கை அனத்தங்கள் காரணமாகவே நாட்டில் மின் துண்டிப்பு இடம்பெற்றது.

என்றாலும் தற்போது டொலர் இல்லாத காரணத்தினால் நாட்டில் மின்துண்டிப்பு இடம்பெறுகின்றது டொலர் இல்லாத காரணத்துக்காக மின் துண்டிப்பு மேற்கொள்ளும் ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கமாகும். நாட்டுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வட்டி முறையின் கீழ் கடன்
பெற்றுக்கொள்ளல், பிரயோசனம் இல்லாத அபிவிருத்திகளுக்காக முதலீடு செய்தல், அந்த கடன் பணத்தை மோசடி செய்தல் போன்ற காரணத்தினாலே டொலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.


அத்துடன் டொலர் பற்றாக்குறையை மறைப்பதற்காக 80வகையான மருந்துப்பொருட்கள், மால்மா, உரம் எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டுவருவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. நாட்டுக்கு தேவையில்லாத விமானம் கொண்டுவருவதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்துவதற்கு கடந்த தினங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

நாடு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் 200கோடி டொலர்களை அரசாங்கம் செலுத்தவேண்டி இருக்கின்றது.

என்றாலும் இந்த கடன் தொகையை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அத்துடன் தற்போது நாட்டில் இடம்பெறும் அவசர எரிபொருள் இறக்குமதியாலும் நிதி மோசடியே இடம்பெறுகின்றது. எத்தனோல் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக மொனராகலை பிரதேசத்தில் 60ஆயிரம் ஏக்கர்வரையான காணி துப்புரவு செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகள் நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட முறையை பின்பற்றியே அரசாங்கம் நிதி வியாபாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றது.

அதனால் புதிய அரசாங்கம் ஒன்று அமையும்வரை எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் போட் சிட்டியில் முதலீடு செய்யப்போவதில்லை. மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும், அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தேவையான முறையில் பணம் கொள்ளையடிப்பதற்கு இருக்கும் பயத்திலாகும். அதனால் சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு 21ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அனுமதிக்கவேண்டும்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளதால், இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்போது இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்க்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்பட்டால் நாட்டுக்கு கிடைக்கும் டொலர் தொகையும் இல்லாமல்போகும்.

அதனால் இந்நிலையில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரத்துக்கமைய தனது பதவிக்காலத்தில் முழுமையாக இருப்பது சரியா பிழையா என்பதை அறிந்துகொள்ள முடியுமானால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பபொன்றை நடத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!