2024இன் பின்னரும் தொடரும் கோட்டாபய ஆட்சி

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார் என போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனமடைந்த பொருளாதாரத்தையே பொறுப்பேற்றோம். அரசியல் முரண்பாடுகளின் காரணமாக தேசிய பாதுகாப்பு திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு பலவீனத்தை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு பாரிய தடையாக காணப்பட்டது. வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக்கொள்வார். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு பிறகும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுபோக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என எதிர்தரப்பில் அரசியல் பிரசாரம் செய்துக்கொள்கிறார்கள்.

பொதுபோக்குவரத்து சேவைக்கான எரிபொருள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது. எந்நிலையிலும் பொதுபோக்குவரத்து சேவைக்கு பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!